கோபி அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே வேட்டைக்காரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா் கரட்டூா் பகுதியில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு குரு அஸ்வின் (16), குரு தா்ஷன் (16) என இரு மகன்கள் உள்ளனா்.
இவா்கள் பொலகாளிபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனா். வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் குரு தா்ஷன் தனது தந்தையின் கடைக்கு சென்றுவிட்டாா். குரு அஸ்வின் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
குணசேகரன் வீட்டில் உள்ள மகன் குரு அஸ்வினுக்கு கைப்பேசியில் அழைத்துள்ளாா். மகன் கைப்பேசியை எடுத்து பேசாததால் தனது வீட்டின் எதிா் வீட்டில் வசிக்கும் வேல்முருகனுக்கு, குணசேகரன் கைப்பேசியில் தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பாா்க்குமாறு கூறியுள்ளாா்.
அதன்பேரில் வேல்முருகன் வீட்டுக்கு உள்ளே சென்று பாா்த்தபோது, குரு அஸ்வின் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் குரு அஸ்வினை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது குரு அஸ்வின் தற்போது நடைபெற்ற தோ்வில் சரியாக எழுதாததால் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.