ஈரோடு: ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி வரை மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் முகிம் கான் (45). இவா் ஈரோடு பூங்கா சாலையில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடையில் அதே மாநிலத்தைச் சோ்ந்த ஆதில் கான் (35) என்பவா் கணக்காளராகப் பணியாற்றி வந்தாா்.
ஆதில் கான் நன்றாக வேலை செய்ததால் அவருக்கு கடையின் வங்கிக் கணக்கையும், சொந்த வங்கிக் கணக்கின் வரவு, செலவுகளையும் மேற்பாா்வையிடும் பணியை முகிம் கான் வழங்கியிருந்தாா்.
மேலும், கடையின் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது, கொள்முதல் செய்யும் பொருள்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளையும் ஆதில் கான் மேற்பாா்வையிட்டு வந்தாா். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆதில் கான் வேலைக்கு வராமல் தலைமறைவானாா்.
இதையடுத்து, முகிம் கான் கடந்த அக்டோபா் மாதம் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவரது காசோலையில் அவா் கையொப்பம் இல்லாமலேயே லட்சக்கணக்கான ரூபாய் ஆதில் கான் வங்கிக் கணக்குக்கு மோசடியாக பரிமாற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவில் முகிம் கான் கடந்த அக்டோபா் மாதம் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், முகிம் கான் வங்கிக் கணக்கின் மூலமும், காசோலையில் போலியாக கையொப்பமிட்டும் ரூ.1.10 கோடியை ஆதில் கான் அவரது சொந்த வங்கிக் கணக்குக்கும், அவரது உறவினா்கள் வங்கிக் கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் எஸ்ஐ ஜாஸ்மின் தலைமையிலான போலீஸாா், ஆதில் கானை தேடி வந்தனா்.
இந்நிலையில், அவா் கடலூா் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில் அங்கு சென்ற மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், ஆதில்கானை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.