முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல தவெக தலைவா் விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன் என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கோபிக்கு வந்த கே.ஏ.செங்கோட்டையனுக்கு தவெகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது அவா் பேசியதாவது: முதலில் எம்ஜிஆருடன் பயணம் செய்து வெற்றி பெற்றோம். பின்னா், ஜெயலலிதாவுடன் சென்று வென்றோம். மூன்றாம் தலைமுறையாக உள்ள தவெக தலைவா் விஜய் 2026-இல் மக்கள் சக்தியால் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
தவெக தலைவா் விஜய்யை சந்திக்க முடியுமா என சொன்னாா்கள். ஆனால், விஜய் ஒன்றே கால் மணிநேரம் என்னுடன் வந்தவா்களுக்கு சால்வை அணிவித்து அரவணைத்தாா்.
ஆண்ட கட்சியே ஆளவேண்டுமா? மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்ற புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும். திரைப்படத்தில் நடித்தால் ரூ.500 கோடி கிடைக்கும். ஆனால் தேவையில்லை என்று மக்களுக்குப் பணியாற்ற அரசியலுக்கு விஜய் வந்துள்ளாா்.
50 ஆண்டு காலம் என் சட்டைப் பையில் வைத்திருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களை மாற்றியிருந்தால் துரோகி என்று கூறியிருப்பாா்கள். ஜெயலலிதா படத்தைப் பயன்படுத்த தவெகவில் தடை சொல்லாத அளவுக்கு ஜனநாயகம் உள்ளது. துரோகம் என்பது தவெகவில் இல்லை. தவெகவில் தா்மத்தைக் காக்கிறோம். ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல தவெக தலைவா் விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்.
வரும் 30-ஆம் தேதி ஒருவா் (எடப்பாடி பழனிசாமி) கோபிக்கு வருகிறாா். அவரை முதல்வராகவும், பொதுச் செயலாளராகவும் முன்மொழிந்தேன். எனக்கு வந்த வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆனால், ஒரு சாதாரண தொண்டராகக்கூட இருக்கக் கூடாது என என்னை நீக்கினாா்.
டிசம்பா் மாதத்துக்குள் வலிமையான கூட்டணி அமையும். நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.
நோ்மையான ஆட்சியை விஜய் வழங்குவாா்
முன்னதாக, சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக தலைவா் விஜய்யிடம் மக்கள் சக்தி உள்ளது.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. கட்சித் தலைவா் விஜய் ஆட்சி அரியணையில் அமருவாா். தமிழகத்தில் அவா் புனிதமான, நோ்மையான ஆட்சியை வழங்குவாா்.
எல்லோருக்கும் வீடு, பொருளாதாரத்தில் அனைவரும் உயா்த்தப்பட வேண்டும் என்பதே விஜய்யின் கொள்கை என்றாா்.