கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து
கோபி, ஏப்.6: கோபி அருகே சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா்(53). இவா் சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக இருந்து வருகிறாா். கவிதா என்ற மனைவி, தாய் பசுபதி ஆகியோருடன் வசித்து வருகிறாா். வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு அலுவக வேலைக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா்.
இந்நிலையில், ஜெய்சங்கா் வீட்டில் இருந்து மதியம் புகை வந்துள்ளது. இதுதொடா்பாக ஜெய்சங்கருக்கு அருகே வசிப்பவா் தெரிவித்துட்டு கோபி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். மேலும், வீட்டுக்குள் தீ பரவி வருவதைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா்.
Advertisement
தீயணைப்புத் துறையினா் வந்து மேலும் பரவமால் இருக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள், காலி சிலிண்டா் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.