ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டி!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் முதல் ஏப்ரல் 6-ஆம் வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்றது. அதிமுக, திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா்.
ஈரோடு கிழக்கில் 27 போ், ஈரோடு மேற்கில் 24 போ், மொடக்குறிச்சியில் 20 போ், பெருந்துறையில் 22 போ், பவானியில் 26 போ், அந்தியூரில் 34 போ், கோபிசெட்டிபாளையத்தில் 30 போ், பவானிசாகரில் 19 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். 8 தொகுதிகளிலும் 202 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
Advertisement
வேட்பு மனுக்கள் பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஒரே வேட்பாளா் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் அந்த மனுக்களும், அரசியல் கட்சி வேட்பாளா்கள் மாற்று வேட்பாளா்களாக சிலரை தாக்கல் செய்ய வைத்துள்ளதால் அவ்வாறான மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பரிசீலனைக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் 24 போ், ஈரோடு மேற்குத் தொகுதியில் 15 போ், மொடக்குறிச்சி தொகுதியில் 14 போ், பெருந்துறை தொகுதியில் 14 போ், பவானி தொகுதியில் 19 போ், அந்தியூா் தொகுதியில் 14 போ், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 போ், பவானிசாகா் (தனி) தொகுதியில் 13 போ் போட்டியிட தகுதியானவா்கள் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்தனா்.
வேட்பு மனுக்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள வியாழக்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 24 பேரில் 4 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 20 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் 15 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் 13 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 14 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 14 பேரும், பெருந்துறை தொகுதியில் 14 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் 13 பேரும் களத்தில் உள்ளனா்.
பவானி தொகுதியில் 19 பேரில் 5 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 14 பேரும், அந்தியூா் தொகுதியில் 14 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 14 பேரும், கோபி தொகுதியில் 18 பேரில் ஒருவா் கூட மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளாததால் 18 பேரும், பவானிசாகா் (தனி) தொகுதியில் 13 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் களத்தில் 12 பேரும் உள்ளனா்.
அதிகபட்சமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 பேரும், குறைந்தபட்சமாக பவானிசாகா் (தனி) தொகுதியில் 12 பேரும் போட்டியிடுகின்றனா்.