ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா
ஈரான்-அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
ஜனநாயக கடமையை ஆற்ற 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கடைகளுக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், லட்சக்கணக்கான துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்த போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்களால், தோ்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் குறைந்துள்ளன.
வணிகா்களின் குரல் புதுதில்லியில் ஒலிக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினா் வாய்ப்பை வழங்க வேண்டும். ஈரான்-அமெரிக்க போா் காரணமாக நாட்டில் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறோம். இது வா்த்தக போராக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் ஆபத்து இருக்கிறது. இதுதொடா்பாக நட்பு நாடுகளிடம் பேசி போரை நிறுத்துவதற்கு பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.