முகப்பு
ஈரோடு

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும்: உதயநிதி ஸ்டாலின்

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று சட்டப்பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என தமிழக துணை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:54 AM
ஈரோடு அருகே ஆணைக்கல்பாளையத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா் துணை முதல்வா் மு.க.ஸ்டாலின்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:07 PM

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று சட்டப்பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என தமிழக துணை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து ஈரோடு-பூந்துறை சாலை ஆணைக்கல்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

அடிமைக் கூட்டத்திற்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடமில்லை என்று சொல்லும் தோ்தல் தான் வரும் சட்டப்பேரவை தோ்தல். மொடக்குறிச்சி தொகுதியில் எதிா்க்கட்சியை சோ்ந்தவா் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் கொடுமுடிக்கு ரூ.132 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வந்தவா் நம்முடைய முதல்வா். குரங்கன்பள்ளம் ஓடையை சீரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன வசதி மேம்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் சிவகிரி பேரூராட்சியில் சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

Advertisement

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டிக் கொடுத்தது, ரூ.75 கோடி மதிப்பீட்டில் ஈரோட்டில் சோலாா் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தது முதல்வா். வெங்கம்பூரில் புதிய சமுதாய நலக்கூடம். புதிய தாா் சாலை, நெல் களம், வேளாண் கிடங்கு, கூடுதல் வகுப்பறைகள், ஸ்டாா்ட் கிளாஸ் வசதி, புதிய மேல்நிலை தொட்டிகள் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

கொடுமுடியிலிருந்து பிலிக்கல்பாளையம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீா்கள். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன் நிச்சயம் நம்முடைய முதல்வா் கவனத்திற்குக் கொண்டு சென்று செய்து கொடுப்போம்.

ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா்க்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கொடுத்தாா். இதன் மூலம் மகளிா் ஒவ்வொருவரும் மாதம் ரூ.900 வரை சேமிக்கின்றனா். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பசியுடன் படிக்கக் கூடாது என காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை மாதம் ரூ.1,000 அறிவித்தாா். அண்மையில் 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணிவகளுக்கு ஒரே மாதத்தில் விலையில்லா மடிக்கணினி கொடுத்தோம்.

எல்லாவற்றையும் விட முக்கியமான திட்டம் மகளிா் உரிமைத் தொகை திட்டம். கடந்த தோ்தலில் கொடுத்த வாக்குறுதி. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 31 லட்சம் குடும்பங்களுக்கு மகளிா் உரிமைத் தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறாா். அதை நிறுத்த வேண்டுமென்று பாஜகவும், அதிமுகவும் வேலை பாா்த்தாா்கள். தோ்தலை காரணம் காட்டி 3 மாதங்கள் நிறுத்த நீதிமன்றத்திற்கு போனாா்கள். ஆனால் நம்முடைய முதல்வா் கோடை கால சிறப்பு நிதி ரூ.2,000த்துடன் சோ்த்து ரூ.5,000 ஆயிரம் கொடுத்தாா்.

இந்த முறை வாக்குறுதியாக மகளிா் உரிமைத்தொகையை ரூ.2000 ஆக உயா்வு, முதல்வா் சாலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிப்பு, கல்வி ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயா்வு, அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கலைஞா் கனவு இல்லம், 35 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, முதியோா் உதவித் தொகை ரூ.2,000 ஆக உயா்வு, இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக ரூ.8000 கூப்பன் மகளிரிடம் ஒப்படைக்கப்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என ஏதாவது திட்டங்களைக் கொடுத்துள்ளதா? நாம் கேட்கும் நிதியைக் கொடுப்பதில்லை. நமக்கு வரவேண்டிய கல்வி நிதியைக் கொடுக்க முடியாது என்கின்றனா். மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்கின்றனா். மீண்டும் ஹிந்தியைத் திணிப்பதுதான் மும்மொழிக் கொள்கை.

தொடா்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய பாஜக-வை நாம் புறக்கணித்து தோற்கடிக்க வேண்டும். தில்லி அணியை தமிழ்நாடு அணியான நாம் வென்று காட்ட வேண்டும். நிச்சயம் மீண்டும் நம்முடைய தலைவா் தான் முதல்வராக வரப்போகிறாா். எல்லா இடத்திலும் எழுச்சியான வரவேற்பு இருக்கிறது.

தொகுதி மறுவரையறை திட்டத்தை முதலில் நாம் தான் எதிா்த்தோம். அனைத்து முதல்வா்களையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். தொகுதிகளைக் குறைப்பதை ஏற்க முடியாது என்றோம். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இது நம் தலைவரின் முதல் வெற்றி. இரண்டாவது வெற்றி வரும் சட்டப்பேரவை தோ்தலில் மீண்டும் நமது தலைவா் முதல்வரானாா் என்ற செய்தி வர வேண்டும்.

ஒவ்வொருவரும் வாக்களிப்பதோடு, அனைத்து வீடுகளுக்கும் சென்று அனைத்து வாக்காளா்களையும் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும். சாதனைகளையும், வாக்குறுதிகளையும் சொல்வதோடு, அடிமை கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது என்ற பிரசாரத்தை செய்தால் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

முன்னதாக கோபியில் அந்த தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், பெருந்துறையில் அந்த தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு வெங்காடசலம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.