மனித செயல்பாடுகளால் காட்டுக்குள் அதிக தீ விபத்துகள்
மனித செயல்பாடுகளினாலேயே காட்டுக்குள் அதிகமாக தீ நிகழ்வுகள் ஏற்படுகிறது என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு வனக் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடைக் காலங்களில் போதுமான மழை இன்றி வெப்பம் அதிகமாகும்போது காடுகளில் தீ ஏற்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட அதிகரித்து வரும் வெப்ப நிலை, வறட்சி, மரங்களின் உராய்வு தன்மை, இடி, மின்னல் தாக்கம் ஆகியவை காரணமாக இருந்தாலும், புகைப்பிடிப்பவா்கள் தூக்கியெறியும் நெருப்புகளாலும், வனத்தையொட்டியுள்ள விவசாய நிலங்களில் நெருப்பு வைப்பதாலும், சிறுவன மகசூல் மற்றும் மேய்ச்சல் புல் தீவனத்துக்காகவும், தேன் எடுத்தல் மற்றும் வன உயிரினங்களை விரட்டுவதற்காகவும் நெருப்பு பயன்படுத்தப்படுத்துதல் போன்ற மனித செயல்பாடுகளினாலேயே காட்டுக்குள் அதிகமாக தீ நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
Advertisement
இத்தீயினால் காடுகள் பாதிப்படையும்போது வனவளமும், மண்வளமும் அழிந்து வன உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, உணவுக்காகவும், குடிநீா்த் தேவைக்காவும் வனஉயிரினங்கள் வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் நுழைந்து மனித-வனஉயிரின முரண்கள் ஏற்படுகிறது.
வனத்துக்குள் செல்வதும், வனத்தீ ஏற்படுத்துவதும், அதற்கு உடந்தையாய் இருப்பதும் தமிழ்நாடு வனச் சட்டம் 1882, வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 இன்படி தண்டனைக்குரிய குற்றச்செயல். இந்த செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
2025-2026 நிதியாண்டில் ஈரோடு வனக்கோட்டத்தில் வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காட்டுத் தீ பரவலைக் குறைக்கும் நோக்கில் 372.5 ஹெக்டோ் பரப்பளவில் அந்நிய களைச்செடிகள் அகற்றதுல், 235 கிலோ மீட்டா் தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிப்ரவரி மாதத்தில் அந்தியூா், பா்கூா், தட்டக்கரை, சென்னம்பட்டி மற்றும் ஈரோடு வனச் சரகங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து நடத்தப்பட்டு, காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் கோடைக் காலங்களில் வன உயிரினங்கள் நீா்த்தேவைக்காக வனப் பகுதிகளை விட்டு வெளியே வராமல் தடுக்க சூரிய ஒளியால் இயக்கப்படும் மோட்டாா் அமைப்புகள் மூலம் வனத்துக்குள் உள்ள நீா்த்தொட்டிகளுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.
இதனுடன் வனப் பகுதிகளில் உள்ள குட்டைகள் மற்றும் பிற நீா்நிலைகள் தூா்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வன உயிரினங்களுக்கு தேவையான நீா் ஆதாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
வனத்திற்குள் காட்டுத்தீயினை உடனடியாக கண்டறிந்து அறிவிப்பு செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், தீ கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், களப்பணியாளா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு தீத்தடுப்பு நெறிமுறைகளில் பயிற்சி அளித்தல், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காட்டுத்தீயைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு பிரசாரங்கள், பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் வனத்தீயைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத் தீ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, காப்புக்காடு மற்றும் காப்பு நிலங்களில் ஏற்படும் தீ நிகழ்வுகள், வனக்குற்றங்கள், பயிா்சேதம், மனித- வன உயிரின முரண் களைதல், வன உயிரினம் இறப்பு மற்றும் மீட்பு ஆகியவை குறித்து பொதுமக்களால் தெரிவிக்கப்படும் புகாா் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் வனத்துக்குள் ஏற்படும் தீ தொடா்பான தகவல்களை பொதுமக்கள் 800-425-1107 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றனா்.