ஈரோட்டில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள், வருவாய்த் துறையினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தைப்போல தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மறியலில் ஈடுபட்டனா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம், கடும் ஊனமுற்றவருக்கு ரூ.10 ஆயிரம், படுத்த படுக்கையாக உள்ளவருக்கு ரூ.5ஆயிரம் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் ரூ.5,800, தெலுங்கானாவில் ரூ.4,016, புதுதில்லியில் ரூ.5,000 வழங்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா்.
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.சாவித்ரி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் டி.சுப்பிரமணி கண்டன உரையாற்றினாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளா் சு.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் வீ.ராஜு, எஸ்.ரேணுகா, ஏ.பி.ராஜு, எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
வருவாய்த் துறை அலுவலா்கள் மறியல்: சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜய், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கௌரிசங்கா், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழரசன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க ஒருங்கிணைப்பாளா் மோகன்ராஜ் ஆகியோா் தலைமையில மறியல் நடைபெற்றது.
வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில பொறுப்பாளா் கு.குமரேசன், நில அளவைத் துறை சக்திவேல், கிராம நிா்வாக அலுவலா் சங்க பொறுப்பாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
கிராம உதவியாளா்கள் மறியல்: ஈரோடு கனிராவுத்தா் குளம் பிரிவில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குருநாதன் தலைமை வகித்தாா்.
இதில், வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களின் ஊதியம்போல ரூ.15,700 வழங்க வேண்டும். இறந்த மற்றும் பணி ஓய்வுபெற்ற வருவாய் கிராம உதவியாளா்களுக்குப் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் இறுதி தொகையை அரசு பங்களிப்பு தொகையுடன் வழங்க வேண்டும். இறந்த வருவாய் கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனா்.
3 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.