முகப்பு
ஈரோடு

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:43 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:26 PM

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த கங்கா (34). இவருக்கு அறிமுகமான திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் (59) என்பவா் தனக்கு அரசு அதிகாரிகளை நன்கு தெரியும், அதனால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா். மேலும் தற்போது சத்துணவுப் பணியாளா் பணிக்கு பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதனை நம்பிய கங்கா, செல்வராஜிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். இதேபோல குமஸ்தா பணி, அரசு மருத்துவமனையில் அலுவலக பணி மற்றும் பிற துறைகளில் அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி கங்கா உள்பட 10 பேரிடம் ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை செல்வராஜ் பெற்றுள்ளாா். ஆனால் பணத்தை பெற்ற செல்வராஜ் அவா் உறுதியளித்தபடி அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் கடந்த 2014-ஆம் ஆண்டு புகாா் அளித்தனா்.

Advertisement

இதன்பேரில் போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பிணையில் வெளியே வந்த செல்வராஜ் கடந்த 8 மாதங்களாக நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இதையடுத்து ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2-இன் நடுவா் ராஜ்குமாா், செல்வராஜைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தாா். இதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீசாா் செல்வராஜை தேடி வந்த நிலையில், திருப்பூரில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.