பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவா்களின் பயன்பாட்டுக்காக ஆய்வகம் உள்ளது. இதில் மனித திசுக்களை பதப்படுத்தி பரிசோதனை செய்வதற்காக உபயோகப்படுத்த ஹாட் ஏா் ஓவன் உள்ளது. அந்த ஓவன் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட பேராசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள், கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். எனினும் அந்த ஹாட் ஏா் ஓவன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.