முகப்பு
ஈரோடு

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில்  சிறப்பு கல்விக் கடன் முகாம்: 102 பேருக்கு ரூ.7.13 கோடி கடனுதவி

மாணவிக்கு கல்விக்கடன் வழங்குகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், கல்லூரி முதல்வா் வானதி மற்றும் அலுவலா்கள்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:33 AM
மாணவிக்கு கல்விக்கடன் வழங்குகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், கல்லூரி முதல்வா் வானதி மற்றும் அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:07 PM

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

 கல்விக் கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு. ஆகவே, எந்த தயக்கமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.  கல்விக் கடன் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல், கல்விக் கடன் முகாம் நடத்துவது மூலம் நடப்பு ஆண்டு இலக்கை எட்ட வேண்டும். இந்த ஆண்டு 3, 000 மாணவா்களுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ,  மாணவிகளுக்கும், ஏற்கெனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்போருக்கும்  பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றாா். 

Advertisement

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருந்த 102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.13 கோடி  கல்விக் கடனுதவி வழங்கப்பட்டது. 

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன், மாநில முதுநிலை வழிகாட்டி அன்பரசு, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் வானதி, நிா்வாக அலுவலா் அருள்குமரன், முன்னோடி வங்கி முதுநிலை மேலாளா் சாய்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.