முகப்பு
ஈரோடு

அழுகல் நோய்: கோபியில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு

கோபி பகுதியில் மஞ்சள் பயிரில் அழுகல் நோய் காரணமாக அதன் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:09 PM
மஞ்சள் அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

கோபி பகுதியில் மஞ்சள் பயிரில் அழுகல் நோய் காரணமாக அதன் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாகதேவம்பாளையம், மணியகாரன்புதூா், வெள்ளாளபாளையம், நன்செய்கோபி, பொலவக்காளிபாளையம், புதுக்கரைபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

பிடிஎஸ் 10, ராஜமுந்திரி உள்ளிட்ட நாட்டு ரக விதை மஞ்சளை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடவு செய்து சாகுபடியை தொடங்கினா். களை எடுத்தல், மருந்து தெளித்து உரமிடுதல் போன்ற பணிகளைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக கோபி பகுதியில் முழுவீச்சில் மஞ்சள் அறுவடை செய்து வருகின்றனா்.

Advertisement

கூலி ஆள்களைக் கொண்டு விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என தனித் தனியாக பிரித்து அறுவடை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் மஞ்சள் சாகுபடியின்போது மழை பொய்த்து போனதால் இலை கருகல் நோயும், பருவம் தவறி அக்டோபா் மாதங்களில் பெய்த மழை மற்றும் பனியாலும் மஞ்சளில் கிழங்கு அழுகல் நோய் தாக்கியது. இதனால் மஞ்சள் போதிய விளைச்சல் இன்றி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மஞ்சள் அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

ஏக்கா் ஒன்றுக்கு 1,200 கிலோ விதை மஞ்சளை விலைக்கு வாங்கி நடவு முதல் அறுவடை, பதப்படுத்தும் வரை என முதலீட்டு செலவு ரூ. 3 லட்சம் வரை செலவாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். ஆனால் மஞ்சள் போதிய விளைச்சல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

அறுவடை செய்யப்பட்ட  மஞ்சள்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை மட்டுமே விளைச்சல் உள்ளது. மஞ்சளின் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு பவுன் நகையும், ஒரு குவிண்டால் மஞ்சளும் ஒரே விலைக்கு விற்பனையானது. கடந்த 15 ஆண்டுகளாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சளுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யப்படாததால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மஞ்சளை சாகுபடி செய்யவே விவசாயிகள் முன்வரமட்டாா்கள். எனவே, அரசு மஞ்சளுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments