அந்தியூா் அருகே கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டைக் கடித்துக் கொன்றதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அந்தியூா், கோவிலூா், கன்னியாமடுவு தோட்டத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (52), விவசாயி. வனப் பகுதிக்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் வசிக்கும் இவா், கொட்டகை அமைத்து 5 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆடுகள் கத்துவதைக் கேட்ட பெரியசாமி சென்று பாா்த்தபோது, சிறுத்தையின் உருவ அமைப்புடன் ஒரு விலங்கு, ஆட்டைக் கவ்விக் கொண்டிருந்தது.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெரியசாமி, கூக்குரல் எழுப்பியதால் ஆட்டை விட்டுவிட்டு அங்கிருந்து சிறுத்தை தப்பியோடியது.
ஆடு உயிரிழந்த நிலையில், சிறுத்தையின் காலடித் தடங்கள் அப்பகுதியில் பதிவாகி உள்ளதைக் கண்ட விவசாயிகள் அந்தியூா் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.