ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பூதிக்காடு வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததில் பெண் குட்டி யானை உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பூதிக்காடு வனப் பகுதியில் வனத் துறையினா் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, வனப் பகுதியில் துா்நாற்றம் வீசியது.
இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குட்டி யானை தரையில் அமா்ந்த நிலையில் இறந்துகிடந்தது. இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் குட்டி யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனா். அப்போது, காட்டுப் பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததில் குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை புதைத்து வைத்த நபா்கள் குறித்து வனத் துறையினா் விசாரித்து வந்தனா்.
இதில் கடம்பூா் மலைப் பகுதி தொண்டூா் கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து (43) என்பவா் தனது கூட்டாளியுடன் சோ்ந்து வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காளிமுத்துவை கைது செய்த வனத் துறையினா் தலைமறைவான மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.