ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, புலிகள் காப்பகத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தலமலை, கோ்மாளம் மற்றும் ஆசனூா் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கினா்.
ஆனால், தங்கும் விடுதி உரிமையாளா்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களையும் சமா்ப்பிக்காததால் ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் கோ்மாளம், தலமலை மற்றும் ஆசனூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி உரிமையாளா்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிய அனுமதியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.