பனிப்பொழிவு காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் புதன்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5,500 -ஆக உயா்ந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மல்லிகை செடிகளைப் பொருத்தவரை கோடை காலத்தில் அதிக விளைச்சல் கொடுப்பது வழக்கம். குளிா்காலங்களில் பனிப்பொழிவு காரணமாக செடிகளில் உள்ள அரும்புகள் சிறுத்து பூக்கள் வளா்ச்சி பாதிக்கப்படுவதால் விளைச்சல் குறைந்துவிடுகிறது.
கோடை காலங்களில் ஏக்கருக்கு 100 கிலோ வரை விளைச்சல் தரும் மல்லி, குளிா்காலத்தில் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது.
தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாகக் குறைந்தது. பூக்களின் தேவை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கூறினா். இதனால் செவ்வாய்க்கிழமை கிலோ ரூ.4050-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை ஒரு கிலோ ரூ.5,500-க்கு விற்பனையானது.
மல்லிகைப் பூ விலை அதிகரிப்பதால் பொங்கல் பண்டிகையின்போது பூக்களின் விலை மேலும் உச்சத்தை தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.