சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புன்செய் புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற செளடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நிகழ்வாக புதன்கிழமை கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்துக்குளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி அழைப்பு தொடங்கியது. இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், வெற்று உடம்பில் இரண்டு கைகளில் கத்தி ஏந்தியபடி மேளதாள இசைக்கேற்ப நடனமாடி வேண்டுதலை நிறைவேற்றினா்.
விழாக் குழுவினா் கூறும்போது, இந்த விழாவில் பங்கேற்ற இளைஞா்கள், பாரம்பரியமாக கைத்தறி நெசவுத் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். கைத்தறி நெசவுத் தொழில் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடத்தப்படுகிறது. சிறுமிகள், சுவாமி அழைப்புடன் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். சக்தி அழைத்தல் ஊா்வலமானது கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, செளடேஸ்வரி அம்மன் கோயிலை அடைந்தது என்றனா்.