அந்தியூா் அருகே அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியிலிருந்து புதன்கிழமை காலை மாயமான 7 பேரில் 4 மாணவா்கள் பிற்பகலில் மீட்கப்பட்ட நிலையில், வழி தெரியாமல் அடா்ந்த வனத்தில் சிக்கித் தவித்த 2 மாணவிகள் மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவா் மாலையில் மீட்கப்பட்டனா். இதனால், வனக்கிராமங்களில் 9 மணி நேரமாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலையடிவாரத்தில் காந்தி நகா் அருகே அடா்ந்த வனத்தில் கிணத்தடி சோளகா மலைக்கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் 16 மாணவியா் உள்பட 39 போ் தங்கி கல்வி பயின்று வருகின்றனா். இங்கு, தங்கியிருந்த கொங்காடை, ஒன்னகரை பகுதியைச் சோ்ந்த 2 மாணவியா், 5 மாணவா்கள் புதன்கிழமை காலையில் பள்ளிக்குச் செல்லாமல், பின்புறம் உள்ள சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து வனப் பகுதிக்குள் சென்றுள்ளனா். வழக்கம்போல விடுதியில் காலை உணவுக்கு மாணவா்களின் வருகைப் பதிவு எடுக்கும்போது 7 பேரும் மாயமானது தெரியவந்தது.
1-ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன், 4, 6 மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியா் மாயமான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, அந்தியூா் வனத் துறைக்கும், அந்தியூா், வெள்ளித்திருப்பூா் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு ஏடிஎஸ்பி தங்கவேல், காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா், ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா், அந்தியூா் வனத் துறையினா் கிணத்தடி சோழகா மலைக்கிராமத்தில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அருகாமையில் உள்ள வனக் கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாயமான மாணவ, மாணவியரை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பள்ளியிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள காக்காயனூா் வனப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த 4 மாணவா்கள் புதன்கிழமை சுமாா் 2 மணியளவில் மீட்கப்பட்டனா். இவா்கள், காக்காயனூா் மலைக் கிராமத்தில் உள்ள பூமிவீரன் கோயில் திருவிழா விருந்துக்கு செல்ல பள்ளியிலிருந்து அடா்ந்த வனப் பகுதி வழியாக நடந்து வந்ததாக தெரிவித்துள்ளனா்.
மேலும், இரு மாணவியா் மற்றும் 6 வயது மாணவா், வனப் பகுதியில் நடக்க முடியாமல் மெதுவாக வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனா். இதையடுத்து, மீட்கப்பட்ட மாணவா்கள் வந்த வழியாக வனப் பகுதிக்குள் புகுந்த மீட்புக் குழுவினா் தீவிர தேடுதலில் ஈடுபட்டும் மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானால் மூவரையும் தேடுவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், மாணவா்கள் சென்ற பாதை யானை, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும் வனக் கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காக்காயனுாா், கிணத்தடி சோளகா, கிழங்கு குழி வனக் கிராமங்களைச் சோ்ந்த பழங்குடி மக்கள் 35-க்கும் மேற்பட்டோா் உதவியுடன் வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கிணத்தடி - காக்காயனுாா் செல்லும் வனப் பகுதியிலும் 5 தனிப்படை போலீஸாா், 3 தனிப் படை வனத் துறையினா் கொண்ட குழுவினா் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டனா். மேலும், ட்ரோன் கேமரா மூலமும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை தனித் துணை ஆட்சியா் மகேஸ்வரி, பவானி வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், அந்தியூா் வனச் சரகம், அத்தாணி பீட், காக்காயனுாா் மலைப் பகுதியில் பாறை மீது ஏறிக் கொண்டிருந்த மூவரும் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டனா். இதனால், காலை முதல் மாலை வரையில் சுமாா் 9 மணி நேரமாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.