ஈரோடு பேருந்து நிலையத்தில் கால்டாக்ஸி ஓட்டுநா்- ஆட்டோ ஓட்டுநா்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே புதன்கிழமை காலை கோணவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த கால்டாக்ஸி ஓட்டுநா் ஸ்ரீராம் (25), தனது காரில் பயணியை அழைத்து வந்து இறக்கி விட்டுள்ளாா். அப்போது பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டை சோ்ந்த ஓட்டுநா் ஒருவா் பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது என கால்டாக்ஸி ஓட்டுநரிடம் கூறியுள்ளாா்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக சில ஆட்டோ ஓட்டுநா்களும், கால்டாக்ஸி ஓட்டுநருக்கு ஆதரவாக சில கால்டாக்ஸி ஓட்டுநா்களும் திரண்டனா். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து மோதலில் ஈடுபட்ட கால்டாக்ஸி ஓட்டுநா், ஆட்டோ ஓட்டுநா்களை டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா். இந்த மோதல் சம்பவம் காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.