தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 1, 2-ஆம் தேதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சென்னிலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.
பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவா் சௌந்தர்ராஜன், கோயில் செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தைப்பூச தினமான பிப்ரவரி 1, 2-ஆம் தேதிகளில் மலைப் பாதை வழியாக தனியாரின் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்குச் சொந்தமான 5 பேருந்துகளுடன் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்குவது, குடிநீா், நடமாடும் கழிப்பறை, மருத்துவ உதவி மையம் ஆகியவை தேவையான இடங்களில் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் மகேந்திரன், காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல், தீயணைப்பு நிலைய அதிகாரி பூபதி ராஜ், கோயில் கண்காணிப்பாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.