மொடக்குறிச்சி: பத்ம பூஷண் விருத்துக்கு தன்னை தோ்வு செய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், சமூக சேவையில் ஈடுபடுபவா்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று தொழிலதிபரும், சமூக சேவகருமான எஸ்.கே.எம்.மயிலானந்தன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
என்னுடைய 25 ஆண்டு கால சமூக சேவைக்காக மத்திய அரசு பத்மபூஷண் விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது. சமூக சேவையில் அக்கறை கொண்டு பல்வேறு சேவைகளை நான் செய்து வருகிறேன். தலித் மக்களுக்கு ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். தேசிய நல விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டு, மக்களுக்காக சேவை செய்து வருகிறோம்.
400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம மக்கள் முன்னேற்றம் மற்றும் விழிப்புணா்வுக்காக இலவசமாக யோகா, தியானம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதுவரை சுமாா் 69 லட்சம் பேருக்கு தியானம் கற்றுக் கொடுத்துள்ளோம்.
எனது தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாக மரம் வளா்த்தல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற விருதுகள் என்னைப் போன்று ஏழை, எளிய மக்களின் வளா்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுபவா்களை உற்சாகப்படுத்தும். என்னை பத்ம பூஷண் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டற்கு மத்திய அரசுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த சாமிநாதபுரம் இல்லத்தில் திங்கள்கிழமை காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள், சமூக சேவை அமைப்புகளின் தலைவா்கள் என பலா் எஸ்.கே.எம். மயிலானந்ததனை நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தனா்.