கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறு: தவெகவினா் போராட்டம்
கோபி அருகே நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து
கோபி: கோபி அருகே நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தவெகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள புதுக்கரைப்புதூா், குள்ளம்பாளையம், மொடச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது . இதில், அதிமுகவின் தலைமைப் பேச்சாளா் தாராபுரம் முத்துமணிவேல் பங்கேற்று, அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவா் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மொடச்சூா் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு வந்த முத்துமணிவேலை, செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, செங்கோட்டையனின் ஆதரவாளா்களிடம் முத்துமணிவேல் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.