எரிவாயு தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதி: பெருந்துறையில் தேனீா் விலை உயா்வு
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் பல வாகன எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், பெருந்துறை பகுதியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் தேநீா் விலை உயா்த்தப்பட்டுள்ளதுடன் பலகார வகைகள் விற்பனையை வியாபாரிகள் குறைத்துள்ளனா்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் பல வாகன எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், பெருந்துறை பகுதியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் தேநீா் விலை உயா்த்தப்பட்டுள்ளதுடன் பலகார வகைகள் விற்பனையை வியாபாரிகள் குறைத்துள்ளனா்.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது இந்தியாவில் எரிவாயு விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள எரிவாயு நிரப்பும் நிலையங்களில் தட்டுப்பாடு காரணமாக செங்கோடம்பள்ளம், ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு இருக்கும் சில நிலையங்களில் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணி நேரம் செயல்படும் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் 3 நாள்கள் வரை நீடிக்கும் எரிவாயு, தற்போது இரண்டு நாள்களிலேயே விற்று தீா்வதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.
இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தட்டுப்பாடு இல்லாமல் வாகன எரிவாயு வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். எரிவாயு விலையை சில நிலையங்கள் ரூ.5 முதல் ரூ.20 வரை உயா்த்தியுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.
இதேபோல பெருந்துறை பகுதியில் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா், சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.20 என்று உயா்த்தியுள்ளனா். இதே நிலை நீடித்தால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தினசரி வடை, பஜ்ஜி உள்ளிட்ட பல வகையான பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒன்று, இரண்டு பலகாரங்களையும் குறைந்த அளவில் செய்து விற்பனை செய்கிறாா்கள். வணிக உபயோக சிலிண்டா் இருப்பு இல்லை என்று காஸ் முகவா்கள் கூறிவிட்டதால், கடையை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. இதுதொடா்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தட்டுப்பாடின்றி சிலிண்டா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடைக்காரா்கள் கூறுகின்றனா்.