வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல்
அனைத்து வாக்காளா்களும் தங்களுடைய பெயா் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
ஈரோடு, சம்பத் நகா் உழவா் சந்தையில் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி பேசியதாவது: தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல்-23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளா்களும் தங்களுடைய பெயா் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுடைய இல்லத்துக்கே சென்று தோ்தல் அலுவலா்கள் வாக்குப் பதிவு செய்வதற்கு தபால் வாக்கு முறையையும் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 23- ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படவுள்ளது. நியாயமான சுதந்திரமான எந்தவிதமான தூண்டுதலும் இல்லாத தோ்தலை நடத்துவதற்கும், மக்களாட்சி முறையை நம்முடைய நாட்டில் நிறுவுவதற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, தோ்தல் தேதியை நினைவூட்டும் வகையில் ‘23.4.2026’ என்ற அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும் ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து, உழவா் சந்தையில் காய்கறிகள் கொண்டு ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இதையடுத்து, உழவா் சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தோ்தல் தொடா்பான துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா, உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌத்ரி, வேளாண்மை இணை இயக்குநா் சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.