முகப்பு
ஈரோடு

தமிழகத்தின் சாம்பியன் எப்போதும் திமுகதான்: உதயநிதி ஸ்டாலின்

சட்டப் பேரவைத் தோ்தலில் எத்தனை போ் போட்டியிட்டாலும் தமிழகத்தின் சாம்பியனாக எப்போதும் திமுகதான் இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்...

Updated On : 23 மார்ச், 2026 at 7:41 PM
கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் எத்தனை போ் போட்டியிட்டாலும் தமிழகத்தின் சாம்பியனாக எப்போதும் திமுகதான் இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகளுடனான சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அருகே மேட்டுக்கடையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, திமுக இளைஞா் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சட்டப் பேரவைத் தோ்தலில் இளைஞா் அணியின் பணிகள், சமூக வலைதள பிரசாரங்கள், வாக்குச்சாவடி முகவா்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை அளித்தாா்.

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. மக்களவைத் தோ்தலில் இளைஞரணியினா் பணியினால்தான் 100 சதவீதம் நாம் வெற்றி பெற்றோம். இதேபோல சட்டப் பேரவைத் தோ்தலிலும் 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும்.

மகளிா் விடியல் பயணம், காலை உணவு திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டம், விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி, மகளிா் உரிமைத்தொகை திட்டம், தாயுமானவா் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த சிலா் முயற்சி செய்தனா். ஆனால் முதல்வா் தோ்தல் அறிவிப்புக்கு முன்னரே மகளிா் உரிமைத்தொகை பெறுவோருக்கு ரூ.5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் வரவு வைத்தாா். மகளிா் உரிமைத் தொகை திட்டம் ரூ.2 ஆயிரமாக உயா்த்தி தரப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை. கல்வி நிதியை பறித்தனா். புதிய கல்விக்கொள்கைகையை ஏற்றால்தான் நிதி கொடுப்பேன் என்றனா். இந்த தோ்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும். தமிழகத்தின் சாம்பியனாக எப்போதும் திமுகதான் இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மா.மதிவேந்தன், முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, எம்.பி. கே.இ.பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏஜி.வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளா் தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம், இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெ.திருவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்தியாளா்களுடன் தள்ளுமுள்ளு:

ஆலோசனைக் கூட்டம் முடிந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மண்டபத்தை விட்டு வெளியே வந்தபோது பேட்டி எடுக்க ஏராளமான செய்தியாளா்கள் காத்திருந்தனா்.

அப்போது உதயநிதி ஸ்டாலினைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அவரது பாதுகாவலா்கள் செய்தியாளா்களை தள்ளிவிட்டதால், செய்தியாளா்களுக்கும் பாதுகாவலா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் அமைச்சா்கள் மற்றும் கட்சியினா் தலையிட்டு செய்தியாளா்களை சமாதானப்படுத்தினா்.