முகப்பு
ஈரோடு

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 14 மே 2026, 3:44 am IST
குழந்தையுடன்  குண்டம்  இறங்கும் பெண். ~குண்டம்  இறங்கும்  பக்தா்கள்.
பகிர்:

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி புதன்கிழமை அம்மன் அழைத்து வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பக்தா்கள் படைக்கலம் எடுத்து பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி கோயிலுக்கு வந்தனா். கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்துக்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து மழைவாழ் மக்கள், பக்தா்கள், பள்ளி மாணவிகள், இளைஞா்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கி தீ மிதித்தனா்.

Advertisement

விழாவையொட்டி தண்டுமாரியம்மன் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயில் விழா 25 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்துவதால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். விழாவின் தொடா்ச்சியாக பொங்கல் விழா மற்றும் கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 14) நடைபெறும்.