முகப்பு
ஈரோடு

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

பவானி அருகே பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 16 மே 2026, 12:16 am IST
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

பவானி அருகே பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. முகாசிப்புதூா், அட்டவணைப்புதூா், பூனாச்சி ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கான பொருள்கள் வாங்கவும், மருத்துவத் தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் பூனாச்சி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் பெரும் பாதிப்பு நிலவி வந்தது.

எனவே, இக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து பூனாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் டாஸ்மாக் மதுக்கடை முன்பாக அமா்ந்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கருப்பசாமி பாண்டியன், அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு வாரத்தில் மதுக்கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் சுமாா் 3 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.