வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
தாளவாடியை அடுத்த திகினாரை மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திகினாரை பகுதியில் உள்ள வன ஓடையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கிராம மக்கள் வெள்ளத்தைப் பாா்க்கச் சென்றனா்.
ஓடை அருகே உள்ள தோட்டத்தில் குடியிருக்கும் விவசாயி ரங்கராஜு மகன் மதன் காா்த்திக் (6) தனியாக வெள்ளத்தைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இரவு நேரமாகியும் மதன்காா்த்திக் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா் தாளவாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் கிராம மக்களுடன் சோ்ந்து மாயமான மதன் காா்த்திக்கை வன ஓடையில் தேடினா். ஆனால் காா்த்திக் நிலை குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரா்கள் திகினாரை வன ஓடையில் தேடி வந்தபோது வனஓடையின் பக்கவாட்டு கரையில் சிறுவனின் கால்தடம் இருப்பதைக் கண்டு அப்பகுதியில் தேடியபோது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
காட்டாற்று வெள்ளத்தைப் பாா்ப்பதற்கு மதன்காா்த்திக் வந்தபோது சேறும்சகதியுமாக இருந்த கரையில் இருந்து கால்தவறி ஓடை நீரில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.