கூடலூர்- உதகை மலைப் பாதையில் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுரை
கூடலூர்-உதகை மலைப் பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக, கூடலூர் போக்குவரத்து போலீஸார் சுற்றுலா
கூடலூர்-உதகை மலைப் பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக, கூடலூர் போக்குவரத்து போலீஸார் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு திங்கள்கிழமை மாலை அறிவுரை வழங்கினர்.
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையை ஓட்டி கூடலூர் அமைந்துள்ளது. தற்போது கோடை சீசன் ஆரம்பித்துவிட்டதால் சுற்றுலா வாகனங்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், எளிதில் எந்தப் பகுதிக்கும் செல்ல முடிவதில்லை.
தவிர, மலைப் பாதையில் உதகையிலிருந்து இறங்கி வரும் சுற்றுலா வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துக்குள்ளாவதாலும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கூடலூர் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.
தொடர்ந்து மூன்று நாள்களாக ஓட்டி வரப்படும் வெளி மாநில சுற்றுலா வாகனங்களை மலைப் பாதையில் நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்லுமாறு கூறுவதுடன், மலைப் பாதையில் எவ்வாறு வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகின்றனர். இதனால் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா வாகனங்களின் விபத்து குறைந்தது குறிப்பிடத்தக்கது.