மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி: அச்சத்துடன் தொழிலாளர்கள் ஓட்டம்
மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொய்யாப் பழத்தை ருசிக்க வந்த கரடியைக் கண்டு அஞ்சி தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டமெடுத்தனர்.
மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொய்யாப் பழத்தை ருசிக்க வந்த கரடியைக் கண்டு அஞ்சி தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டமெடுத்தனர்.
மஞ்சூர் அருகே தூதூர்மட்டம், கெரடாலீஸ், டெரேமியா, அணிமன் உள்ளிட்ட கிராமங்களில் 1,500-க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இக்கிராமங்கள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், விளைநிலம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
உணவு, குடிநீர் தேடி, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து, இப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
அணிமன், கெரடாலீஸ் பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கொய்யாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், அவற்றை ருசிக்க கரடி ஒன்று திங்கள்கிழமை பகல் நேரத்தில் வந்தது. இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக கூக்குரலிடவே, கரடி அருகிலிருந்த தேயிலைத் தோட்டப் புதரில் மறைந்தது.
அங்கு தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கரடியைக் கண்டவுடன் அங்கிருந்து ஓட்டமெடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர், கரடியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.