குந்தா கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா
மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கிராமத்தில், கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கிராமத்தில், கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக கோத்தர் இன மக்கள் தோன்றிய கிராமம். நீலகிரி மாவட்டத்தில் தற்போது குந்தா கோத்தகிரி, கொல்லிமலை, சோலூர், கோக்கால், திருச்சிக்கடி, புது கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூடலூர் கோக்கால் ஆகிய 7 கிராமங்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
குந்தா கோத்தகிரியில் தற்போது சுமார் 100-க்கு மேற்பட்ட கோத்தர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் குலதெய்வமான அய்யனோர் அம்மனோரையை வழிபட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த ஆண்டுக்கான விதைப்புத் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது. குந்தா கோத்தகிரியில் இரவு 9 மணிக்கு ஓடையில் கிராம மக்கள் குளித்துவிட்டு, உடைத்த விறகு மூலம் தீ மூட்டி அதில் வரும் அக்னியை வழிபட்டு மீண்டும் வீடு திரும்பினர்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அய்யனோர் அம்மனோரை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் 9 மணிக்கு கிராம மக்கள் இணைந்து சென்று விளைநிலங்களில் சாமைப் பயிரை விதைத்தனர்.
பிறகு, பகல் 11 மணிக்கு கோயில் பூசாரி வீட்டுக்கு வந்து உணவு அருந்திய பின்னர், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று உணவு அருந்தினர். புதன்கிழமை மதியம் 3 மணியளவில் அய்யனோர் அம்மனோரை கோயிலுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்தனர்.
பின்னர் மதியம் 3 மணிக்கு கிராம ஓடையில் நீராடி, கலாசார உடை அணிந்து குந்தா கோத்தகிரி கிராம மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் சென்றனர். விதைப்புத் திருவிழா நடைபெற்ற 3 நாள்களாக கிராம மக்கள் ஊர் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் கிராமப் பகுதியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.