நீலகிரி மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு
நீலகிரி மாவட்டத்துக்கான 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்துக்கான 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
தண்ணீரை சேமிப்போம் எனவும், ஒரு துளியில் அதிக மகசூல் என்ற கொள்கையுடனும் கூடிய இத்திட்டத்தை நபார்டு வங்கி தயாரித்திருப்பது நடப்பு சூழ்நிலையில் ஏற்புடையதாகும். அதேபோல உழவர் மன்றம் திட்டமும் மிகச் சிறப்பானதாகும். இத்திட்டத்தோடு அரசின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் விவசாயிகளுக்கு அதிகப் பயன் கிடைக்கும்.
மேலும், நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் வரும் நிதியாண்டில் நிதித் தேவையும் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைப் பொருத்த மட்டில் மொத்த நிதி ஆற்றலான ரூ.3,068.21 கோடியில் வேளாண் மற்றும் அதன் இணைத் தொழில்களுக்கு 70 சதவீதமும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு 13 சதவீதமும், இதரத் தொழில்களுக்கு 17 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்அறிவழகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் வசீகரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.