துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கியதில் முறைகேடு : நகர்மன்ற அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தினக் கூலி வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட நகர்மன்ற அலுவலர்கள் மற்றும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தினக் கூலி வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட நகர்மன்ற அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணி ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், தேசிய பட்டியல் இன ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் முருகன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் சலுகைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து கடந்த 3 நாள்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்குவதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் பணியாற்றி வரும் 500க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.600 வழங்குவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட நகர்மன்ற அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணி ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது என்றார்.