ஓணிகண்டியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தல்
மஞ்சூர் அருகேயுள்ள ஓணிகண்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூர் அருகேயுள்ள ஓணிகண்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூர் அருகே ஓணிகண்டி, அன்னமலை, காமராஜர் நகர், அண்ணா நகர், பெள்ளத்திக்கம்பை உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டம், கட்டடத் தொழிலாளிகளாக உள்ளனர். இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை வாங்க கீழ்குந்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைக்குத் தான் வரவேண்டும். இக்கடையில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் ரேஷன் பொருள்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் தினசரி கூலி வேலைக்குச் செல்லும் இவர்கள் 2 அல்லது 3 நாள்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மஞ்சூர் அருகேயுள்ள ஓணிகண்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அண்ணா நகர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கூறுகையில், ரேஷன் பொருள்கள் வாங்க மாதத்தின் முதல் வாரத்தை கடையிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் பல பொருள்கள் விரைவில் தீர்ந்து விடுவதாக கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகிறோம் என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஓணிகண்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கேட்டு கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.