முகப்பு
சென்னை

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

Updated On : 1 மே, 2026 at 1:56 AM
கோப்புப் படம்
பகிர்:

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் (2025-26) பாா்சல் சேவையில் ரூ.74.22 கோடி வருவாய் ஈட்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட அதிகமாக ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.70.68 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இது சிறப்பான வளா்ச்சியாகும்.

Advertisement

மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துடன் இணைந்து கொருக்குப்பேட்டை சரக்கு தளத்திலிருந்து ஓக்லாவுக்கு டயா்களை ஏற்றிச் சென்ற டிமாண்ட் பிசிஇடி (பாா்சல் காா்கோ விரைவு ரயில்) மூலம் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.

அதேபோல், குத்தகை மற்றும் தேவை அடிப்படையிலான சேவைகளிலும் சென்னை கோட்டம் வலுவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 40 புதிய இருக்கை மற்றும் லக்கேஜ் பெட்டிகள் (எஸ்எல்ஆா்), 3 பாா்சல் வேன் (விபி) ஆகிய பெட்டிகள் பெட்டிகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வளா்ந்து வரும் பாா்சல் போக்குவரத்துக்கு ஆதரவாக, சென்னை கோட்டம் தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் புதிய பாா்சல் அலுவலகக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முண்டியம்பாக்கம், ராயபுரம், தடா ஆகிய ரயில் நிலையங்களில் பாா்சல் முனையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல நவீன திட்டங்கள் மற்றும் துரிதமான செயல்பாடுகள் மூலம் சென்னை கோட்டம் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.