நீலகிரியில் குளோரின் கலந்த தண்ணீரையே விநியோகிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த தண்ணீரையே விநியோகிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த தண்ணீரையே விநியோகிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டவை:
நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதோடு, உணவு நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் டேங்கர் லாரிகள் குளோரின் கலந்த (குளோரினேஷன்) தண்ணீரையே வழங்க வேண்டும்.
இறைச்சி வதைக்கூடங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் தெருவோரக் கடைகள் உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தள்ளுவண்டிக் கடைகளில் முறையாக உணவு தயாரிக்கப்பட வேண்டும்: சமையல் எண்ணெயை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடாது. பழைய மீன், பழைய இறைச்சி போன்றவற்றை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது.
பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்ளை விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் பகுதியில் இவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுவதால், இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவகங்களில் எத்தகைய பிளாஸ்டிக் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. மதிய உணவுக் கூடம், அங்கன்வாடி மையங்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்று பெற வேண்டும். ஓட்டல், பேக்கரி போன்ற சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உணவுப் பொருள் தயாரிப்பில் செயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது.
உணவுப் பொருள்களை பொட்டலமிடுவதில் உணவுப் பாதுகாப்பு தரச் சட்ட விதிகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களில் அன்னதானம், தற்காலிக கடைகளைக் கண்காணிக்க காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணியாற்ற வேண்டும்.
மாவட்டம் முழுதும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களைக் கொண்டு கூட்டுக்களஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் தர சட்ட விதிகளைப் பின்பற்றாத உணவு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
தேயிலைத்தூள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படம் குறித்து 94440 42322, 99431 26000 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.