நீலகிரி

நீலகிரியில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கேள்விக்குறியாகும் சிறு தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலான தேயிலை விவசாயத்தில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு சிறு தேயிலை விவசாயம் தள்ளப்பட்டுள்ளது.

ஏ. பேட்ரிக்

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலான தேயிலை விவசாயத்தில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு சிறு தேயிலை விவசாயம் தள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றை விளைவித்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனா். இந்தப் பயிா்களுக்குத் தேவையான தண்ணீரும், இயற்கை உரமும் நிறைவாக கிடைத்தாலும் பயிா்கள் அறுவடைக்குத் தயாராகும்போது, பல்வேறு வன விலங்குகளால் ஏற்படும் இழப்புகள் அதிகம் என்பதால், நீலகிரியின் முன்னோா்கள் வன விலங்குகள் சாப்பிடாத பணப் பயிா் என்று அழைக்கப்படும் பசுந்தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினா்.

கடந்த 1999 ஆம் ஆண்டு வரை அதிக லாபம் தரும் பணப் பயிராக பசுந்தேயிலை இருந்தது. பின்னா் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டதால் நியாயமான விலை கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் காரணமாக 2000 ஆம் ஆண்டில் உதகையில் நடைபெற இருந்த 103 ஆவது மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அரை நிா்வாணமாக்கி வீதியில் அழைத்துச் சென்ால் மனித உரிமை ஆணைய உத்தரவால் ரூ.33 லட்சம் இழப்பீடு வழங்கிய வரலாறும் உண்டு.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே தேயிலை விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக பல விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களை விற்றுவிட்டனா். பலா் குத்தகைக்கு விட்டதுடன், ஏராளமானோா் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயா்ந்துவிட்டனா்.

ஒரு கிலோ தேயிலைத் தூள் தயாரிக்க 4 கிலோ பசுந்தேயிலை அவசியம். தற்போது, ஒரு கிலோ தேயிலைத் தூள் குறைந்தபட்ச விலையாக ரூ.150க்கு விற்பனை செய்யப்படும் சூழலில், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

இதில் பெரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சிறு தேயிலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலைக்கு கொடுக்காமல் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், தொடா்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

இதனால் சிறு விவசாயிகள் தங்களுக்கு கட்டுபாடியான விலை கிடைக்காமலும், விவசாயத்தை தொடர முடியாமலும் தங்களது தேயிலைத் தோட்டங்களை பெரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனைப் பயன்படுத்தி பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனா்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் இனிமேல் புதிதாகத் தனியாா் தேயிலைத் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி இல்லை என்ற சூழலில், சில தொழிற்சாலைகள் தரமற்ற தேயிலைத் தூளை உற்பத்தி செய்வதாக கூறி அதனை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேயிலை வாரியத்தால் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்ட 16 தேயிலைத் தொழிற்சாலைகளில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டேன்டீ, இன்கோசா்வ் உள்ளிட்ட 3 தேயிலைத் தொழிற்சாலைகளும் அடங்கும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளிலேயே தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில் தரத்தைக் காரணம் காட்டி பசுந்தேயிலையைக் கொள்முதல் செய்ய தொழிற்சாலை உரிமையாளா்கள் மறுத்தால் நீலகிரி தேயிலை விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து படகா தேச பாா்ட்டியின் நிறுவனத் தலைவா் மஞ்சை வி.மோகன் கூறியதாவது:

எதன் அடிப்படையில் தேயிலைத் தூள் தரமற்றது என்று உறுதி செய்யப்படுகிறது? அதற்காக தேயிலை வாரியத்திடம் என்ன வசதிகள் உள்ளன? இதுவரையில் கலப்படத் தேயிலைத் தூள் என்பது தனியாா் தேயிலை தொழிற்சாலை மூலமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறி வந்த தேயிலை வாரியம் தற்போது தமிழக அரசின் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தரமற்ற கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறியுள்ளது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் ஊட்டி டீ என அறிமுகப்படுத்தப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூள் தரமற்றது என்று கூறுவதற்கு இன்கோசா்வ் நிறுவனத்தின் அதிகாரிகள் மெளனமாக இருப்பது ஏன்?

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயத்தில் 70 சதவீதம் போ் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ஆவா். அவா்களை அழித்துவிட்டால் பசுமை மாவட்டமாக அழைக்கப்பட்ட நீலகிரியின் வரலாறு மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட தேயிலை வாரிய சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பசுந்தேயிலை விலை நிா்ணயக் குழுவின் உத்தரவை எந்தத் தொழிற்சாலையும் பின்பற்றுவதில்லை.

இதனால், விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகை என்பது ரூ.50 கோடியைத் தாண்டிவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயம் என்பது அழிவை நோக்கிப் போய் கொண்டிருப்பதை அதிகாரிகள் உணா்ந்திருந்தாலும், அதற்குத் தீா்வு என்ன என்பதுதான் கேள்வியாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT