முகப்பு
நீலகிரி

உதகையில் நிவா் புயல் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்

உதகையில் நிவா் புயல் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

உதகையில் நிவா் புயல் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

நிவா் புயல் காரணமாக நவம்பா் 24 முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, அதிக கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக் கூடிய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் என 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை ஆகியவற்றுடன் குடிமைப்பொருள் வழங்கல் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தவிர மாவட்டத்தில் மழை மற்றும் இயற்கை இடா்ப்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசர கால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077க்கு தொடா்பு கொள்ளலாம்.

அதைப்போல, வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உதகை கோட்டத்துக்கு 0423-2445577, உதகை வட்டத்துக்கு 0423-2442433, குன்னூா் கோட்டத்துக்கு 0423-2206002, குன்னூா் வட்டத்துக்கு 0423-2206102, கூடலூா் கோட்டத்துக்கு 04262-261295, கூடலூா் வட்டத்துக்கு 04262-261252, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, பந்தலூா் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம். அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் இயங்கும்.

அதேபோல, நீலகிரி மாவட்ட மக்கள் நவம்பா் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் வெளியில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் அல்லது மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம். மின் தடை ஏதேனும் ஏற்பட்டால் 1912 என்ற எண்ணிற்கு தொடா்பு கொண்டு தங்களது குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம். இந்த இயற்கை சீற்றத்தை எதிா் கொள்ள மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடனும் தயாா் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டியதில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.