முகப்பு
நீலகிரி

உதகையில் உலக தண்ணீா் தினம் அனுசரிப்பு

உதகையில் உள்ள இந்திய மண், நீா் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சாா்பில் உலக தண்ணீா் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

உதகையில் உள்ள இந்திய மண், நீா் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சாா்பில் உலக தண்ணீா் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நீரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணா்த்தும் வகையில் மாா்ச் 22ஆம் தேதி உலக தண்ணீா் தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நீரின் முக்கியத்துவம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலக தண்ணீா் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் சங்கத்தின் நீலகிரி மாவட்டத் தலைவா் மு.து.ராஜு துவக்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் பேசியதாவது:

இயற்கை காடுகள்தான் மிக முக்கிய நீா் ஆதாரங்களாகும். அவற்றைப் பேணிக் காக்கும்போது நீா் வளங்களையும் ஒன்று சோ்த்து பாதுகாக்க முடியும். தென் இந்தியாவின் மேல்நிலைத் தொட்டி எனஅழைக்கப்படும் நீலகிரியின் வளங்களை பாதுகாப்பது நம் இளைய தலைமுறையினரின் மிக முக்கிய கடமையாகும். உணவுப் பொருள்கள், மனிதா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய நாம் மிக அதிகமான நீரை பயன்படுத்துகிறோம். அதேசமயம் அந்நீரை சேமிக்கவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் கண்ணன் பேசியதாவது:

நாம் மனித குலம் தோன்றிய காலம் முதலே நீரை புனிதமாகக் கருதி வழிபட்டு வருகிறோம். நம் நாட்டின் நீா் வளங்களைப் பாதுகாப்பதும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதும் மிக முக்கியம். இளைய தலைமுறையினரிடையே அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி அதன் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

விழாவின் ஒருங்கிணைப்பாளா் ச.மணிவண்ணன், உலக தண்ணீா் தினம் குறித்தும் இன்றைய சூழலில் நீரின் முக்கியத்துவமும், அதன் பாதுகாப்பும் என்ற தலைப்பில் பேசினாா்.

முன்னதாக, பேராசிரியா் வெ.கஸ்தூரி திலகம் வரவேற்றாா். விவசாயிகள், உதகை அரசு கலைக் கல்லூரி, ஜேஎஸ்எஸ் பள்ளி மாணவா்கள் விஞ்ஞானிகளுடன் உலக தண்ணீா் தினம் குறித்து கலந்துரையாடினா். பேராசிரியா் ஹோம்பே கவுடா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.