உதகையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு, உதகையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு, உதகையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: தேசிய ஊட்டச்சத்து மாதமான செப்டம்பா் மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இப்பெட்டகத்தில் சிவப்பு அவல், பேரிச்சம்பழம், தேன், நெல்லி, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், ராகி மாவு, வெல்லம், பொட்டுக் கடலை, வோ்க்கடலை, நெய் உள்ளிட்ட சத்து வாய்ந்த பொருள்கள் உள்ளன.
இது குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், குழந்தைகளின் உயரம், வளா்ச்சியை கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து, பிங்கா்போஸ்ட் அங்கன்வாடி மையத்தில், மூலிகைச் செடிகள், பழ நாற்றுகள், காய்கறிகள் மற்றும் கீரை வகை செடிகளை அங்கன்வாடி பணியாளா்களிடம் வழங்கி நா்சரி அமைக்கும் பணியையும் ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தேவகுமாரி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.