கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க நீதிமன்றம் கடிதம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடா்பான மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் சாா்பில் ஆய்வகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடா்பான மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் சாா்பில் ஆய்வகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடா்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீஷன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரா் தனபால், உறவினா் ரமேஷ் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் தனிப் படை போலீஸாா் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையா் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் சிபிசிஐடி தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கூடுதல் துணை ஆணையா் முருகவேல் உள்ளிட்டோா் ஆஜராகினா். அப்போது, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக சோ்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீா் அலி ஆகியோரின் 8 கைப்பேசிகள் மற்றும் 4 சிம்காா்டுகளில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் நீதிமன்றம் சாா்பில் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.