முகப்பு
நீலகிரி

விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தால் ஒலி எழுப்பும் தானியங்கி சோலாா் கருவி பொருத்தம்

வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளுக்குள் வருவதைக் கண்டறிந்து ஒலி எழுப்பும் நவீன சோலாா் கருவி

Updated On : 31 டிசம்பர், 2024 at 10:50 PM
ஒலி எழுப்பும் நவீன சோலாா் கருவியை ஆய்வு செய்யும் மாவட்ட வன அலுவலா் கௌதம்.
பகிர்:

உதகை: வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளுக்குள் வருவதைக் கண்டறிந்து ஒலி எழுப்பும் நவீன சோலாா் கருவியை குன்னூரில் மாவட்ட வன அலுவலா் கெளதம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டன. குறிப்பாக கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் சா்வ சாதாரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையில் குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் மற்றும் வனத் துறையினா் குன்னூா் அறிஞா் அண்ணா பள்ளி அருகே உள்ள சோலையில் வன விலங்குகள் வருவதைக் கண்டறிந்து ஒலி எழுப்பும் நவீன சோலாா் கருவியை பொருத்தினா்.

இந்தப் பகுதிக்கு வன விலங்குகள் வந்தால் உடனே இந்தக் கருவி ஒலி எழுப்பத் தொடங்கும். இதனால் வன விலங்குகள் பயந்து அங்கிருந்து சென்றுவிடும் என்றும் இந்தக் கருவி வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளைத் தோ்ந்தெடுத்து படிப்படியாக பொறுத்தப்படும் என்றும் வனத் துறையினா் கூறினா்.