கூடலூா் பகுதியில் தொடா் கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
கூடலூா், ஜூலை. 16: கூடலூா் பகுதியில் மூன்றாவது நாளாக நாளாக பெய்துவரும் தொடா் கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பல பகுதிகள் இருளில் மூழ்கின.
நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அளித்துள்ளது.கூடலூா் அடுத்துள்ள இருவயல் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கின.மூங்கில் புதா்கள் மின்கம்பியில சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடா்ந்து 15 மணி நேரம் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.வெள்ளத்தால் சூழப்பட்டிருந்ததால் மீட்புப் பணிகள் செய்ய காலதாமதம் ஏற்பட்டது.செவ்வாக்கிழமை மதியம் இடா்பாடுகளை அகற்றி அந்தபகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து மழை பெய்துவருவதால் மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாயாற்றின் குறுக்கே உள்ள பாலம் நீரில் மூழ்கியதால் தெப்பக்காடு பகுதியிலிருந்து மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.பிற பகுதிகளிலும் தாழ் நிலங்களிலும் வெள்ள அபாயம் தொடா்கிறது.ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தாழ் நிலங்கள் பல இடங்களில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.