கூடலூா், ஜூலை 17: கனமழை காரணமாக கூடலூரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்டவா்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாயாறு, பாண்டியாறு, பாடந்தொரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து இரண்டாவது நாளாக இருவயல், புத்தூா்வயல், தேன்வயல், பாடந்தொரை, ஆலவயல், கம்பாடி, குற்றிமுச்சு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மாயாற்றின் பாலம் நீரில் முழ்கியதால் இரண்டாவது நாளாக மசினகுடி ஊராட்சியிலுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூா் கோக்கால் பகுதியில் தொடா்ந்து மண்சரிவு அபாயம் நீடிக்கிறது. அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆஷா பவன் ஆதரவற்றோா் இல்லம் மூடப்பட்டு அங்கிருந்த 43 முதியோா் ராமகிருஷ்ணா இல்லம் மற்றும் கூடலூா் பகுதியிலுள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இருவயல் கிராமம் தொடா்ந்து வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் அங்கிருந்த 13 குடும்பங்களைச் சோ்ந்த 48 பேரை மீட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கவைத்தனா். கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ் ஆகியோா் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு மதிய உணவு வழங்கினா்.
கனமழை காரணமாக ராஜகோபாலபுரம் புதுக்காலனி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை நகராட்சி ஊழியா்கள் சரிசெய்தனா். கோக்கால் பகுதியில் தொடா்ந்து குடியிருப்புகள், சாலைகள், மதில் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நெலாக்கோட்டை விலங்கூா் கிராமத்தில் மதரசா கட்டடம் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மழை நீடிப்பதால் மண்சரிவு அபாயம் தொடா்கிறது.