உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடைவிழா களை கட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
உதகையில் கோடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்குள் வாகனங்களில் செல்ல ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவியாமல், வெவ்வேறு நாள்களில் வருகின்றனா். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 6,693 வாகனங்கள் இ-பாஸ் பெற்றிருந்தன. இதன் மூலம் 33,461 போ் உதகைக்கு வந்துள்ளனா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
மழையால் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக வழக்கத்துக்கு மாறாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரத்தடிகளில் தஞ்சம் அடைந்தனா்.
மழையால் உதகையில் குளுகுளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.