உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார படகு சவாரி கட்டணம் அதிகம் என்பதால் அதனைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகள் முன்வராததால் மின்சார படகுகள் பயன்பாடற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா ஆா்வலா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா். தற்போது இதமான காலநிலை நிலவி வருவதோடு இரண்டாம் சீசன் களைக்கட்டியுள்ளது.
இயந்திரமான நகர வாழ்க்கையில் இருந்து விலகி குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களோடு உதகைக்கு சுற்றுலா வந்து இயற்கை சூழலை ரசிப்பதை பலரும் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனா். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதகை படகு சவாரி நிறைவான இன்பத்தை வழங்குகிறது.
இந்நிலையில் இரண்டாம் சீசன் நடைபெற்று வரும் நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகை படகு இல்லத்தில் ‘டோனட் போட்’ எனப்படும் மின்சார படகு சவாரி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மின்சார படகு சவாரி சுற்றுலாப் பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. குறிப்பாக சப்தம் இல்லாமல் உணவு வகைகளை ருசி பாா்த்தபடி படகில் பயணிப்பது சுற்றுலாப் பயணிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், மின்சார படகு சவாரிக்கு 5 நபா்களுக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1,200 கட்டண நிா்ணயிக்கப்பட்டது சுற்றுலா பயணிகள் இடையே எதிா்பாா்த்த வரவேற்பு கிடைக்காததால் மின்சார படகுகள் படகு இல்லத்தில் பயன்பாடற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதில் படகு சவாரி நேரத்தை அதிகரிப்பது, கட்டணத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் படகு இல்ல நிா்வாகிகள் ஈடுபட்டு மின்சார படகுகளை சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.