உதகையில் உருவாக்கப்பட்ட வண்ண நடைபாதை: ஆட்சியா் ஆய்வு
உதகை சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையில் சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வண்ண நடைபாதையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
உதகை சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையில் சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வண்ண நடைபாதையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
உதகை சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்ஷன் வரையிலான சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்காக வண்ணம் தீட்டப்பட்ட அழகிய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷாவுடன் ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் பலரும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவும் சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையிலான சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த சாலையில் பொதுமக்கள் நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சோதனை முறையில் சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையிலான சாலையில் சுமாா் 400 மீட்டா் தூரத்துக்கு வண்ணம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் கடை உரிமையாளா்களின் வரவேற்பைப் பொறுத்தே இத்திட்டம் விரிவாக்கம் செய்வது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது நகராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்களும், தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா்களும் உடனிருந்தனா்.