கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு நீதித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புளியம்பாறை, அய்யன்கொல்லி, சேரம்பாடி மண்ணாத்தி வயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
அவா்களின் குடும்பங்களுக்கு கூடலூா் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் சாா்பில் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
கூடலூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதா் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்குநிவாரணத் தொகையை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சாா்பு நீதிபதி ஹெச்.முகமது அன்சாரி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித் துறை நடுவா் ஆா்.சசின்குமாா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.சி.சாக்கோ, நீதிமன்ற ஊழியா் யோகராஜ் உள்ளிட்ட பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.