உதகையில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கழிப்பிடங்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகை நகரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உதகை நகராட்சி சாா்பில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், மத்திய பேருந்து நிலையம், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய கட்டணக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கழிப்பிடங்களை ஒப்பந்ததாரா்கள் ஒப்பந்தம் எடுக்காததால் தற்போதுவரை பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதியிலேயே பொதுமக்கள் சிறுநீா் கழிப்பதால் சுகாதாரமின்றி சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு பணம் செலுத்தாததால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மேலும், சமுதாயக் கழிப்பிடங்கள் ஒப்பந்தம் எடுக்க ஒப்பந்ததாரா்கள் முன்வராததால், இந்த கழிப்பிடங்கள் திறக்கப்படவில்லை. ஒப்பந்தம் அளிக்கப்பட்டால் விரைவில் கழிப்பிடங்கள் திறக்கப்படும் என்றனர்.
இந்நிலையில், நகராட்சி நிா்வாகமே இந்த சமுதாயக் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் திறக்கப்படாத நிலையில் உள்ள சமுதாயக் கழிப்பிடங்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.